நோக்கமும் நிகழ்வும்



மரபுக் கவிதைகளுக்காக எத்தனையோ வலைப்பதிவுகள் இருக்க, மேலும் ஒரு பதிவு எதற்கு?

எத்தனையோ பதிவுகள் இருப்பதுதான் சிக்கலே... எல்லாரும் எழுதிக்கொண்டே போனால் யார்தான் படிப்பது? யார்தான் கவிதைகளைத் தரம் பார்ப்பது? அதையும் நாம்தான் செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டே இந்தப் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது!

நீங்கள் மரபுக் கவிதைகள் எழுதக் கூடியவரா? முதல் வேலையாக இந்தப் பதிவில் தங்களை இணைத்துக் கொள்ளுங்கள்... பிறகு தங்கள் கவிதைகளை [zhaghaan@gmail.com] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள், தங்களைப் பற்றிய, கவிதையைப் பற்றிய, கவிதை எழுந்த நிலையைப் பற்றிய சிறு குறிப்புகளுடன். எந்தப் பரிசீலனையும் இன்றிக் கவிதை பதிப்பிக்கப்படும். பிறகு மற்றவர்கள் அக்கவிதையைப் பரிசீலிக்கலாம், கருத்துக்களை வெளியிடலாம். தாங்களும் பிறரின் கவிதைகளை விமர்சிக்கலாம்.

புதுயுகப் புலவர்களை ஒன்று திரட்டி அனைவரும் பிறரின் படைப்புத்திறனை அறிந்து ஆய்ந்து ஆக்கப்பூர்வமாய் முன்னோக்கிச் செல்லவே இந்த வலைப்பதிவு.

தங்களின் மேலான ஆதரவுடன் அது நிறைவேறும் என நம்புகிறேன்...

புதன், 4 ஆகஸ்ட், 2010

வாரும் புலவீர்காள்...

ஆர்வத்தின் வந்த அருங்கவிகள் அத்துனையும்
ஓர்வலையில் இட்டு உரைத்திட - சீர்வைத்த
சேவடி சேர்ந்தே பணிவோம் சிறக்கவே
தேவே அருள்நீ உவந்து!

(நேரிசை வெண்பா)

முதல் இடுகையை இறைவணக்கத்துடனே துவங்குகின்றேன். எனினும், எந்த ஒரு மதத்தின் இறைவனையும் குறித்துச் சொல்லவில்லை.

இனி இந்த வலை நமக்காக... நீங்கள் மரபுக் கவிதையில் ஆர்வமுள்ளவரெனின் (யாக்கவோ அல்லது படிக்கவோ!) உடனே இவ்வலையில் இணைந்து கொள்ளுங்கள், தங்களின் கவிகளையும் அனுப்பி வையுங்கள்...  இந்த வலை தோய்வின்றி பரபரப்பாக இயங்க ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும்...

அன்புள்ள,
விஜய் :-)

4 கருத்துகள்:

  1. நண்பர் விஜய் அவர்களுக்கு. தங்களின் பணி பாராட்டத்தக்கதும் ஊக்குவிக்கத்தக்கதும் ஆகும். இவ்வலையைத் துவங்கி சற்றேறக்குறைய நான்கு மாதங்களுக்கும் மேல் ஆகிறது. இருப்பினும் மரபுப்பா எழுதுவோரிடமிருந்தோ வாசகர்களிடமிருந்தோ அதிக அளவில் ஒத்துழைப்புக் கிடைக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது. தங்களின் வலையை எனது வலையுடன் தொடுப்புக் கொடுத்துவிடுகிறேன். அதன்மூலம் சிலப்பலர் வர வாய்ப்புள்ளது. முடிந்தவரை தமிழ்மணத்தில் இணைக்கப் பாருங்கள். மேலும் தாங்கள் மரபு எழுதக்கூடியவரா? அல்லது ஏதோ ஆர்வத்தில் ஒருங்கிணைக்கும் முயற்சியைச் செய்கிறீரா?

    இங்கு மரபுக் கவிதைகள் எழுதுபவர்கள் மிகக்குறைவு. ஆக அவர்களாக முன்வந்து அனுப்புவார்கள் என எதிர்பார்ப்பது தவறு எனக்கருதுகிறேன். தங்களுக்குப் பிடித்த, படித்த, வடித்த மரபுக்கவிதைகளைத் தாங்களாகவே எடுத்து இடுகையாக இடலாமல்லவா?

    பதிலளிநீக்கு
  2. அருமையான பணி

    வாழ்த்துகள்

    தமிழுடன்
    திகழ்

    பதிலளிநீக்கு
  3. சங்கம் கண்ட தமிழை சங்கப் பலகை காக்கட்டும் !! வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க .... நட்புடன் நடா சிவா.

    பதிலளிநீக்கு
  4. தளம் அமைத்துக் கொடுத்ததற்கு நன்றி
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு